ஆடி அமாவாசை விரதம்

 

ஆடி அமாவாசை

ஆடி என்பது புனிதமான மாதமாக விளங்குகிறது. இது ஜூலை மத்தியிலிருந்து ஆகஸ்டு மத்திய காலம் வரையிலான காலமாகும். கடவுள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாகத் திகழும் இந்த மாதத்தில் மக்கள், குறிப்பாக, அம்மன் எனப்படும் பெண் தெய்வங்களை சிறப்பாக வழிபடுகிறார்கள். ஆடி அமாவாசை என்பது, இந்த மாதத்தில் வரும் மிகப் புனிதமான நாளாகும்.

அமாவாசை திதி அதாவது அமாவாசை என்பது, முன்னோர்களை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாள் மாதம் ஒருமுறை வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை, பித்ருக்கள் எனப்படும் முன்னோர் வழிபாட்டிற்கு மிகச் சிறப்பானதாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இவர்கள் குறித்து நாம் செய்யும் தர்ப்பணம் போன்ற சடங்குகள் இவர்களைச் சென்றடைந்து, திருப்திப்படுத்தி, மகிழ்வித்து, முன்னோர்களின் நல்லாசிகளை நமக்குப் பெற்றுத் தரும் என்று பல புனித நூல்கள் கூறுகின்றன. இந்த ஆசிகள் நமக்கு பல நன்மைகளைத் தந்து, வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்த வல்லவை ஆகும்.


 

ஆடி அமாவாசையில் அனுசரிக்க வேண்டிய வழிபாடு, விரதம் போன்றவை குறித்தும், அவற்றின் வழிமுறை பற்றியும் இங்கு நாம் அறிந்து கொள்வோம்.    

ஆடி அமாவாசை விரதம்

ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், அன்றைய தினத்தன்று அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். அன்று மக்கள் தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளிக்கலாம். ஆனால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது அன்று தவிர்க்கப்பட வேண்டும். தம் முன்னோர்களை நினைத்து அன்று விரதம் மேற்கொள்பவர்கள், தங்கள் உடல்நிலை அனுமத்தித்தால், உபவாசம், அதாவது உண்ணா நோம்பு இருப்பது மிகவும் நன்மை பயக்கும். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைத்து, நமக்கும், நம் குடும்பத்தினருக்கும், நல்வாழ்வு அமையும். ஆடி அமாவாசை அன்று விரதம் அனுசரிப்பது போலவே, அனைத்து அமாவாசைகளிலும் விரதம் இருந்து முன்னோரை வழிபடுவது, நம் வாழ்க்கை முழுவதும், பல வகையிலும் முன்னேற்றம் தரும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் குடும்பத்தில் இறந்து போன முன்னேர்கள் ஒவ்வொருவரையும், ஆடி அமாவாசை அன்று, நன்றியுடன் நினைவு கூற வேண்டும். பூஜை அறையிலோ, அல்லது சுத்தமான இடத்திலோ அவர்கள் அனைவரின் படங்களைப் பூ சூட்டி, அலங்கரித்து வைத்து, தீபம் ஏற்றி, பின்னர் அவற்றின் முன் இலை விரித்து, அவர்களுக்குப் பிடித்த உணவுப் பதார்த்தங்களை அன்புடன் சமைத்துப், பரிமாறி, படையல் வைக்க வேண்டும். அத்துடன் கூட, ஒரு சொம்பு தண்ணீரில் கருப்பு எள் கலந்து, அவர்கள் முன் வைக்க வேண்டும். பின்னர் தூப தீபம் போன்றவற்றைக் காட்டி, அவர்களை, உள்ளன்புடனும், பக்தியுடனும் வணங்க வேண்டும்

பின்னர், அங்கு உள்ள எள்ளுடன் கூடிய தண்ணீரை, வலது கை ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரல் இரண்டையும் இணைத்துப் பிடித்துக் கொண்டு, அவற்றின் வழியாக, ஒரு தாம்பாளத்தில் மூன்று முறை, மெதுவாக இரைக்க வேண்டும். முன்னோர் வழிபாட்டில் கருப்பு எள்ளுக்கு ஒரு சிறப்பான இடம் உள்ளது. அமாவாசை நாட்களில் எள்ளும், தண்ணீரும் இரைத்து, அவர்கள் குறித்து நாம் செய்யும் வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் அவர்களைக் கண்டிப்பாகச் சென்றடைகின்றன என்பது நம்பிக்கை.  

மேலும், பித்ருக்களான முன்னோர்கள் வாழும் பித்ரு லோகம் எனப்படும் விசேஷமான மேல் உலகத்தில், மூலிகையாக புடலங்காய் உள்ளது எனவும், அதன் கீழ் தான் அவர்கள் இளைப்பாறுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. தவிர, பசுந் தயிர், அதாவது, பசும் பாலிலிருந்து கிடைக்கும் தயிர், பித்ருக்களுக்கு மிகவும் பிரியமானது என்ற கருத்தும் உள்ளது. எனவே, ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்குப் படைக்கப்படும் உணவில், புடலங்காயும், பசுந் தயிரும் இருப்பது, நன்மையும், சிறப்பும் வாய்ந்தது. இந்த வழிபாடுகள் நிறைவடைந்ததும், காக்கைக்கு இலையில் உணவு படைப்பது அவசியம். அன்று, பித்ருக்களின் வடிவமாகவே கருதப்படும் காக்கைகள் உண்ட பின், நாம் உணவருந்துவது, நன்மை பயக்கும்.  

மேலும், தெய்வங்கள் பலரின் இருப்பிடமாகத் திகழும், புனிதமான பசு மாட்டிற்கு, அகத்திக் கீரை, வெல்லம் கலந்த அரிசி, வாழைப்பழம் போன்றவற்றை அன்று அளிப்பது, மிகவும் சிறந்தாகக் கருதப்படுகிறது

தானம்

ஆடி அமாவாசை தினத்தன்று, முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜை போன்றவற்றுடன் கூட, ஏழை, எளியவர்களுக்கு இயன்ற உதவிகள் செய்வது பெரும் நன்மை தரும். அரிசி, காய்கறிகள், வஸ்திரம் எனப்படும் ஆடை, உபயோகமான மற்ற பொருட்கள் ஆகியவற்றை இல்லாதவர்களுக்கு அன்று அளிப்பது, முன்னோர்களின் ஆசியையும், பல நன்மைகளையும் பெற்றுத் தரும். அமாவாசைகளில் ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றுவதும் நல்ல பலனைத் தரும்.

இவ்வாறு, ஆடி அமாவாசை விரதம் அனுசரித்து, பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபாடுகள் நடத்தி, முன்னோர்களை நன்றியுடன் வணங்குவது, அவர்களது அபார ஆசிகளையும், இறை அருளையும் பெற்றுத் தரும். இதனால், கர்ம வினைகளின் கொடும் பாதிப்பிலிருந்தும் நாம் விடுபட்டு, குடும்பம், குழந்தைகள் என நமக்கு நெருக்கமான அனைவருடனும், ஆரோக்கியமும், வளமும் நிறைந்த வாழ்க்கை நடத்த முடியும்.  

நீத்தார் கடன் தீர்க்கவும் , மற்றும் அவர்களின் ஆன்மா முக்தி பெறவும் உதவும் சக்தி வாய்ந்த அமாவாசை - https://www.astroved.com/tamil/specials/aadi-amavasya/

 

Comments